மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக, "பொன்மகள் வைப்பு திட்டம்', "மகளிர் உரிமைத்தொகை திட்டம்', "முதல்வர் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்', "கலப்புத் திருமண உதவித்தொகை திட்டம்', "உழவர் பாதுகாப்பு திட்டம்' உட்பட எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். இத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தி, 30 நாட்களில் தீர்வு காண வேண்டுமென்று அறிவுறுத்தியிருந்தார். குறிப்பாக, பட்டா மாற்ற விவகாரங்களை 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டுமென்பதற் காக, இதுதொடர்பான அலுவலர்களை கண்காணிக்க சென்னையில் தரக்கட்டுப்பாட்டு மையத்தையும் தொடங்கினார். முதல்வரின் இந்த முன்னெடுப்பு எந்த அளவுக்கு பலனளித் துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக பொதுமக்களை சந்தித்தோம்.
ஆதம்பாக்கம், கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்துவரும் 80 வயது சரோஜா என்ற மூதாட்டிக்கு, கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், தொளார் தெற்கு வருவாய் கிராமத்தில் பூர்வீக நிலம் உள்ளது. கூட்டுப்பட்டாவிலுள்ள இந்த நிலத்தை உட்பிரிவு செய்து, தனக்கும், தனது மகன்களுக்கும் பட்டா மாற்றம் செய்ய 4.4.2025-ல், இணைய வழியாக ஆவணங்களை பதிவேற்றம் செய்து, கட்டணமாக 1,500 ரூபாய் செலுத்தியிருக்கிறார். ஆனால், திட்டக்குடி நில அளவையர் சுந்தரமூர்த்தி கண்டுகொள்ளவே யில்லை. பலமுறை நேரில் சென்று சொல்லியும் செய்துதர மறுத்துள் ளார். பின்னர், தொளார் கிராமத்தில் 17.9.2025 அன்று நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு அளித்திருக்கிறார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ண குமார் விரைவில் பட்டா மாற்றம் செய்து தருவதாகக் கூறியிருக்கிறார். ஆனால் தற்போதுவரை செய்துதர வில்லை. அலைந்து அலைந்து ஓய்ந்துபோன மூதாட்டி சரோஜா தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
கொடிக்களம் கிராமத்தைச் சேர்ந்த தருண்குமார், தனது அத்தை கள் உமாராணி, கலைச்செல்வி ஆகி யோரிடமிருந்து 10 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு மூலம் கிரையம் பெற்றுள்ளார். ஆனால் பட்டா மாற் றம் செய்யவில்லை. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கல்பனா விடம் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அவரோ, விற்பனை செய்த உமாராணி, கலைச்செல்வி, விலைக்கு வாங்கிய தருண்குமார் ஆகிய மூன்று பேர் பெயர்களிலும் கூட்டுப்பட்டா வாக மாற்றம் செய்துள்ளார். லஞ்சம் கொடுக்காததால் இப்படி குழப்படி வேலையை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலை யில், 30 9. 2025 அன்று இறையூரில் நடந்த "உங்களுடன் ஸ்டா லின்' முகாமில் மனு கொடுத்து 4 மாதங்க ளாகியும் தனது பெயருக்கு முழுமையாக பட்டா மாற்றம் செய்யப்படவில்லை என்கிறார் தருண்குமார்.
இதுகுறித்து திட்டக்குடி வட்டாட்சி யர் உதயகுமாரை நேரில் சந்தித்து கேட்டோம். ஆவணங்களை வாங்கிப் பார்த்தவர், "காலம் கடந்து விட்டது, மீண்டும் பட்டா மாற்றம் செய்ய இணைய வழியில் பணம் செலுத்தச் சொல்லுங்கள்'' என்று கூறினார். "ஏற்கெனவே பணம் செலுத்தியதற்கு நில அளவையாளர் எந்த வேலையும் செய்யவில்லை. மீண்டும் பணம் செலுத்தச் சொல்கிறீர்களே? நில அளவை யாளரை கண்டிக்காமல் ஒருதலைப்பட்ச மாக பேசலாமா?'' என்று கேட்டபோது, "இப்படியெல்லாம் எதிர்த்துப் பேசக்கூடாது. போய் வேலையை பாருங்கள்'' என்று நம்மை துரத்தாத குறையாக வெளியே அனுப்பினார்.
திட்டக்குடி வட்டாட்சியர் அலு வலகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை பெறுவோர்களின் தொலைபேசி எண்களில் அவ்வப்போது தொடர்புகொண்டு, "நாங்கள் வட்டாட் சியர் அலுவலகத்திலிருந்து பேசுகிறோம் .நீங்கள் உதவித்தொகை பெறுவது குறித்து உங்களிடம் விசாரிக்க வேண்டும்'' என்று மிரட்டி பணம் பறிக்கிறார்கள். பின்னேரி சத்தியகலா, மேலநிம்மேலி சங்கர் ஆகியோர் இதுபோல் போன் செய்து மிரட்டியுள்ளனர். அவர்களின் தொடர்பு எண்களை வட்டாட்சியர் உதயகுமாரிடம் கொடுத்து, பயனாளிகளிடம் மிரட்டி பணம் பறிப்பதாக புகாரளித்தபோது, "பார்க்கிறேன், விசாரிக்கிறேன்'' என்று அலட்சியமாக பதிலளித்தார். இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் சிலரிடம் கேட்ட போது, அலுவலகத்தில் வேலை செய்யும் யாரோ சிலர், புரோக்கர்களிடம் பயனாளி களின் எண்களைக் கொடுத்து இதுபோல் பணம் பறிப்பதாகக் கூறினார்கள். புரோக் கர்களின் பிடியில் திட்டக்குடி வட் டாட்சியர் அலுவலகம் சிக்கித் தவிக்கிறது
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், தனது முன்னோர்கள் சொத்தை தனது பெயருக்கு பட்டா மாற் றம் செய்து தரக்கோரி உரிய ஆவணங் களுடன் விக் கிரவாண்டி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து ஆண்டுக்கணக்காகியும் அவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யவில்லை. இதுகுறித்து அவர், "பட்டாவில் இறந்தவர்கள் பெயர்களை நீக்கிவிட்டு, வாரிசுகளுக்கு ஆவணங்கள் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்து தருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு எத்தனை உத்தரவுகளை போட்டாலும் அரசு அதிகாரிகள் அதை மதிப்பதில்லை. இப்படியான அதிகாரிகள்மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய வேண்டும். அப்போதாவது இவர்கள் திருந்துகிறார் களா என்று பார்ப்போம்'' என்கிறார் கோபத்தோடு.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் திருப்பதி, சுமார் 30 சென்ட் நிலத்தை கிரையம் பெற்றுள்ளார். அவருக்கு முறைப்படி வருவாய் துறையினர் பட்டா மாற்றம் செய்து தரவில்லை. இதுகுறித்து திருப்பதி நம்மிடம், "அரசு அதிகாரி கள், மக்கள் கொடுக்கும் மனுக் களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இந்த லட்சணத்தில் அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு முன்வந்துள்ளது. அதே நேரத்தில், மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள், அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்வதோடு, இப்படிப் பட்டவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என்று அறிவிக்க வேண்டும். அப்படியாவது இவர்கள் மக்கள் பிரச்சனை களை தீர்ப்பார்களா என்று பார்க்க வேண்டும். இதற்காக அரசு சட்டத்திருத்தத்தையே கொண்டு வரலாம்'' என்கிறார்.
வருவாய்த் துறையில் சீர்கேடுகள் மிக அதிகம் என்பதற்கான ஒரு புள்ளி விபரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2025 மார்ச் மாதம் வரை 29 தாசில்தார்கள் முதல் கிராமப் பணி யாளர்கள் வரை வருவாய்த்துறையில் 92 பேர் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் லஞ்சம் பெறுவதில் வருவாய்த்துறை முதலிடத்திலும், மின்சார வாரியம் இரண்டாவது இடத்திலும், உள்ளாட்சித் துறை மூன்றாவது இடத்திலும் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. திருப்பத்தூர் சமூல நல தாசில்தார் வள்ளியம்மாள், சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர் தேவகி, விழுப்புரம் மாவட்டம் ஆலங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், வடமதுரை உதவி வேளாண்மை அலுவலர் சந்திரலேகா, சேலம் மாவட்டம் பெரியேரி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பி.டி.ஓ. கார்த்திக் குமார், மருதண்டபள்ளி பஞ்சாயத்து செயலர் ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்டம் வி.கல்லுப் பட்டியைச் சேர்ந்த சமூக நல விரிவாக்க அலுவலர் உமாராணி ஆகியோர் அவர்கள் துறையில் சிறந்த சேவை செய்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல, பொதுமக்களிடம் லஞ்சம் பெறும்போது லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள். இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
அரசுத் துறைகளில் நேரடியாக மனு கொடுத் தால் அதிகாரிகளும், அலுவலர்களும் பொதுமக்க ளிடம் லஞ்சம் கேட்கிறார்கள் என்பதற்காகவே இணைய வழியில் விண்ணப்பிக்க வழிகாட்டி உள்ளது. அரசு அலுவலர்களோ, எந்த வழியில் விண்ணப்பித்தாலும் காசு இல்லாமல் கதையாகாது என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். 90 சதவிகித அதிகாரிகள் மக்கள் பணியை செய்வதேயில்லை. இதனால் ஏற்படும் வெறுப்பு, அரசின் மீதுதான் பிரதிபலிக்கும். எனவே ஆளுங்கட்சிக்கு தான் இந்த அதிகாரிகளால், அலுவலர்களால் பாதிப்பு. எனவே, இப்படியான அலுவலர்களால் நிறைவேற்றப்படாத மக்கள் கோரிக்கைகளை அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் ஆய்வுசெய்து தீர்வுகாண முயற்சிப்பது நல்லது.
இந்த ஆலோசனையை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் பயன்பாட்டு துறை அமைச்சருமான சி.வி.கணேசனின் கவனத்திற்கு கொண்டுசென்றோம்.
அவர் நம்மிடம் "தங்கள் ஆலோசனை மிகச்சரியானது. நான் உடனடியாக தொகுதி மக்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கை மனுக்கள் குறித்து பொதுஅறிவிப்பின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை வரவழைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் வெளியிலேயே அமர்ந்து, தீர்க்கப்படாத மனுக்கள் மீது அதே இடத்தில் தீர்வு காண வழிவகை செய்கிறேன். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்!
அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களை சரியாக செயல்படுத்தாத அரசு அலுவலர்கள் மீது சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்?
-எஸ்.பி.எஸ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/govt-plan-2026-01-27-12-55-14.jpg)